Wednesday, June 16, 2010

ஓட்டைக்காலணா...


காலையில் , எதிர் வீட்டில் ஆள் இல்லை போலிருக்கிறது, முற்றம் தெளிக்கவில்லை, கோலமிடவில்லை. நாமே போட்டுவிடுவோம் என்று ஒரு வாளி தண்ணீர் தெளித்து, பெருக்கி, கோலமிட்டுக் கொண்டிருக்கையில் அந்த வீட்டுக் காரர்களே வந்தார்கள். குழந்தை, பாட்டி வீட்டிலேயே தூங்கி விட்டாள், அவளை எடுத்துவரப் போயிருந்தேன்.நீங்களே தெளிச்சிட்டீங்களா, அடடா என்று சொன்னாள்.காலையில் வாசல்தெளிக்கும் போது,முதலில் தண்ணீர் தெளித்துவிட்டு அப்புறம் பெருக்க வேண்டும்.மாலையிலென்றால் முதலில் பெருக்கிவிட்டு அப்புறம் தண்ணீர் தெளிக்கவேண்டும். பஜாரில் அதனால்த்தான் சாயுங்காலம் பெருக்கும் போது தூசி மண்டலமாய் இருக்கும். கடை வேலைக்காரர்களில் ஜூனியர்தான் வாசல் பெருக்க வேண்டும். காலையில், கடை திறக்கும் முன்பே பெருக்க, சாணம் கரைத்து தெளிக்க, அனேகமாக யாராவது ஒரு ‘அம்மாள்’நிறையக் கடைகளுக்கு வாடிக்கையாய் வேலை பார்ப்பாள்.
குழந்தை அழுதபடி நடந்து வந்தது.லேசாக கால்தடுக்கி கீழே விழுந்து, இன்னும் கொஞ்சம் அழுதது. முதுகில் ஒரு அறை விழுந்தது.அழுகையின் வால்யூம் கூடிற்று.ஏற்கெனவே இன்று ஸ்கூல் போகமாட்டேன் என்று அழுது கொண்டிருந்தது.பொதுவாகவே குழந்தைகள் கீழே தடுக்கி விழுந்தால், நாம், ஏன் பார்த்து வந்தா என்ன என்று ஒரு அறை விடுவோம். அது அழுகையைக் கூட்டிவிடும்.அதற்கு வேறென்ன தெரியும்.
குழந்தையிடம் கையைப் பிடித்துக் கொண்டு வா, என்றால் அது கையை உதறி விட்டு தானே நடக்க ஆசைப்படும்.நாம் ஓரமாப்ப் போ கார்க்காரன் ஒரு வரத்தா வாரான் என்போம்.ஓரமாகப்போனால் ஏய் தள்ளி வா, நரகலும் சாக்கடையுமாயிருக்குல்லா என்போம். அது என்ன செய்யும்.
இரண்டு நாள் லீவுக்குப் பின் ஸ்கூல் போக எந்தக் குழந்தையும் முரண்டு பிடிக்கும்.நானெல்லாம் கிட்டத்தட்ட இரண்டு மைல் நடந்துதான் பள்ளிக்கூடம் போக வேண்டும் குற்றாலத்தில் அருவிதான் உண்டு அந்தக் காலத்தில் ஸ்கூலுக்கு காசி மேஜர்புரம் போகவேண்டும்.அநியாயத்துக்கு அழுதது நன்றாய் நினைவிருக்கிறது.என் சீனியர் அக்காக்கள் எல்லாம் வா, எங்களுக்கு நேரமாச்சு சார்வாங்க அடிப்பாங்க என்று அவசரப்படுத்துவர்கள்.வீட்டில் உள்ள பண்டம் போக, பள்ளிக்கூடத்தில் வாங்கித் திங்க, ஓட்டைக்காலணாவாக நான்கு எடுத்து, அதைப் பத்திரமாக பாவாடை நாடாவில் கொறுத்து கட்டி விடுவார்கள்.
துணைக்கு வரும் அக்காமார்கள் எப்போது எடுக்கிறார்கள் என்று தெரியாது, தூக்குச் சட்டியில் இருக்கும் இரண்டு இட்லியில் ஒன்றை எடுத்துத் தின்று விடுவார்கள்.சமயத்தில் இரண்டுமே இருக்காது. புது மிளகாய்ப் பொடி வாசனையாய் இருந்தால் இரண்டையும் தின்று விடுவார்கள்.ஓட்டைக்கலணாதான் கை கொடுக்கும்.
மாட்டுத் தொழுவத்தில் கட்டிப் போட்டுப் பயமுறுத்தி,அப்படி அழுது அழுது,பள்ளிக்கூடம் போய், இப்போதும் தினமும் போய்க் கொண்டிருக்கிறேன் , டீச்சராய்.

3 comments:

  1. அற்புதமாய் சோம்பல் முறித்தெழுந்தது நெல்லை டவுண்.சார்வாள் வார்த்தை தேனாய் இனிக்கிறது.நெல்லையைப் பற்றிய உங்கள் நினைவுகள் என் பள்ளிநாட்களின் காலத்தைத் தூசி தட்டி எழுப்புகிறது.

    ReplyDelete
  2. ”சார் வாள்” - நெல்லைக்கே உரிய அழகிய சொற்றாடல்..

    அருமை...

    ReplyDelete
  3. அருமை சார் .

    ReplyDelete